search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் செந்தில் பாலாஜி"

    • ஜெயிலில் சரியான தூக்கம் இல்லாமல் தவித்ததால் ரத்த அழுத்தம் அதிகரித்து இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    • காலை உணவை முடித்த பிறகு முழு உடலுக்கான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது.

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. சுப்ரீம் கோர்ட்டு வரை ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    இந்த நிலையில் ஜெயிலில் இருந்த செந்தில்பாலாஜிக்கு நேற்று முன்தினம் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

    ஏற்கனவே கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்தபோது அவருக்கு காவேரி மருத்துவமனையில் இருதய ஆபரேசன் நடந்தது.

    எனவே இருதயம் தொடர்பான உயர் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருதயவியல் துறை தலைவர் டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.

    செந்தில்பாலாஜிக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தது தெரிய வந்தது. மேலும் உடல் சோர்வும் இருந்தது.

    ஜெயிலில் சரியான தூக்கம் இல்லாமல் தவித்ததால் ரத்த அழுத்தம் அதிகரித்து இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் குடல் புண் இருந்ததும் தெரிய வந்தது. அதற்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் நேற்றே தொடங்கினார்கள்.

    இன்று காலையில் உணவுக்கு முன்பு நடத்தப்பட வேண்டிய பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

    பின்னர் காலை உணவை முடித்த பிறகு முழு உடலுக்கான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கரைப்பதற்கான சிகிச்சையையும் டாக்டர்கள் தொடங்கி உள்ளார்கள்.

    இதுவரை எடுக்கப்பட்டுள்ள அனைத்து பரிசோதனை முடிவுகளும் இன்று மாலைக்குள் வந்து விடும். அதை பார்த்த பிறகுதான் அவர் இன்னும் எத்தனை நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்பது முடிவு செய்யப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமைச்சர் செந்தில் பாலாஜி மிகவும் சோர்வாக காணப்படுவதால் அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
    • இருதயவியல் பிரிவு தலைவர் டாக்டர் மனோகரன் தலைமையிலான மூத்த டாக்டர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்த போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதன்பிறகு அவரை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதன் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி சிறை டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல்சோர்வு, படபடப்பு ஏற்படுவதால் சிறையில் அவ்வப்போது அவரது உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.

    அவரது நீதிமன்ற காவலும் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. மற்றும் ரத்த மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு இருதய பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டி இருந்தது.

    இதற்காக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை அழைத்து வந்தனர். நேற்றிரவு 7.20 மணிக்கு ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு இருதயவியல் பிரிவு தலைவர் டாக்டர் மனோகரன் தலைமையிலான மூத்த டாக்டர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டனர். எக்கோ உள்ளிட்ட இருதய பரிசோதனைகளும் முழுமையாக இன்று காலையில் எடுக்கப்பட்டது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி மிகவும் சோர்வாக காணப்படுவதால் அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல் நிலையை பொறுத்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்வது முடிவு செய்யப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஏற்கனவே கடந்த மாதம் செந்தில் பாலாஜி உடல் அலர்ஜி பிரச்சனை காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புழல் சிறைக்கு திரும்பி இருந்தார். இந்த நிலையில் இப்போது 2-வது முறையாக உடல் நிலை பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.

    • கழுத்து வலிக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை.
    • மருத்துவர்கள் உயர் சிகிச்சை தேவை என கூறியதால் ஓமந்தூராரில் சிகிச்சை.

    சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே கைது நடவடிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவ்வபோது பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒரு மணி நேரம் பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு, நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    கழுத்து வலிக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மருத்துவர்கள் உயர் சிகிச்சை தேவை என கூறியதால், செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
    • இதுதொடர்பான மனு குறித்து அமலாக்கத்த துறை பதிலளிக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வந்தது.

    இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதன் காரணமாக ஜாமின் வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை நவம்பர் 6-ந்தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

    அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    இதில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பத்தாவது முறையாக நீட்டிக்கப்படுவதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, வரும் 22ம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில உள்ள அவணங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பான மனு குறித்து அமலாக்கத்த துறை பதிலளிக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    • சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார்.
    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார். அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி மூலம் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி, ‘சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.
    • செந்தில் பாலாஜி ஏற்கனவே ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு கடந்த ஜூன் 16-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் இருந்துவரும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி, 'சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. வேலைக்காக பணம் கொடுத்ததாக கூறும் யாரும் நேரடியாக செந்தில் பாலாஜியிடம் பணத்தை கொடுக்கவில்லை. அவரின் உதவியாளர்கள் என கூறப்படும் கார்த்திகேயன், சண்முகம் ஆகியோர் மூலம்தான் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியால் தற்போது 30 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாது. எனவே, அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்' என்றார்.

    அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், 'சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தான் தவறு செய்யவில்லை என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக உள்ளார். அவர் சக்தி வாய்ந்த நபராக இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. ஜாமீன் கோருவதற்கு உடல்நிலையை ஒரு காரணமாக கூற முடியாது. எனவே அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    நீதிபதி தனது உத்தரவில், 'செந்தில் பாலாஜி ஏற்கனவே ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு கடந்த ஜூன் 16-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை தவிர வேறு எந்த சூழ்நிலை மாற்றமும் இந்த வழக்கில் ஏற்படவில்லை.

    செந்தில் பாலாஜி தற்போதுவரை அமைச்சராக இருந்து வருகிறார். இதற்கு முன்னதாக அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

    செந்தில் பாலாஜி குற்றச்செயலில் ஈடுபடவில்லை என்பதற்கான நம்பத்தகுந்த காரணங்கள் எதையும் இந்த கோர்ட்டு கண்டறியவில்லை.

    குற்றத்தின் தன்மை கடுமையாக உள்ளது. மனுதாரரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க இயலாது. எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என கூறி உள்ளார்.

    • சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஆகியவற்றில் தனித்தனியாக 3 வழக்குகள் செந்தில்பாலாஜி மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • சிறப்பு கோர்ட்டில் வருகிற 28-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

    சென்னை:

    கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஆகியவற்றில் தனித்தனியாக 3 வழக்குகள் செந்தில்பாலாஜி மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14-ந்தேதி செந்தில்பாலாஜியை கைது செய்தது.

    இதன்பின்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது.

    இதைத்தொடர்ந்து அவர் மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.வாக இருப்பதால் அவர் மீதான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான சிறப்பு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும்.

    அந்த அடிப்படையில், இந்த வழக்கை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி முதன்மை செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டு உள்ளார்.

    சிறப்பு கோர்ட்டில் வருகிற 28-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் செந்தில்பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்க வாய்ப்பு உள்ளது.

    குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதும் சாட்சி விசாரணை உள்ளிட்ட அடுத்தகட்ட விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நிலுவையில் உள்ள வழக்குகளை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்குகளிலும் செந்தில்பாலாஜி மீது அடுத்த மாதம் இறுதிக்குள் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.

    • செந்தில் பாலாஜி கடந்த 12-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது.

    சென்னை:

    சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து பல்வேறு தகவல்களை திரட்டினர்.

    இந்த விசாரணையின்போது செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் பற்றியும் அமலாக்கத்துறையினர் கேள்விகளை கேட்டு விசாரித்தனர். பின்னர் செந்தில் பாலாஜி கடந்த 12-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. ஆனால் அவரை கைது செய்யவில்லை என்று அமலாக்கத்துறையினர் மறுத்து விட்டனர்.

    இந்த நிலையில் அசோக்குமார் மத்திய உளவு துறையின் பிடியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜி விரைவில் அமலாக்கத்துறையில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் அவர் எப்போது சரண் அடைவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சரண் அடைந்த பின்னர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அசோக் குமாரின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் தாய் லட்சுமி என இருவருக்கும் சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை.
    • செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கருதியதால் சம்மன் அனுப்பப்பட்டது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடான பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்ட பிறகு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அசோக் குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்து விசாரணை நடத்துவதாக வெளியான தகவலுக்கு அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    அசோக் குமார் கைது செய்யப்படவில்லை. அவருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை. அசோக் குமாரின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் தாய் லட்சுமி என இருவருக்கும் சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை.

    செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கருதியதால் சம்மன் அனுப்பப்பட்டது.

    கொச்சியில் அசோக்குமார் கைதானதாக வெளியான செய்தி தவறானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டது.

    • அமலாக்கத்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காண்பித்து, அதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர்.
    • கடந்த 6 நாட்களில் அவரிடம் 300-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரை கடந்த 7-ந் தேதி காவலில் எடுத்த அமலாக்கத்துறையினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இன்று 6-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.

    சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து பல்வேறு கேள்விகளை கேட்டு செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அமலாக்கத்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காண்பித்து, அதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தை விரிவாக பதிவு செய்து உள்ளனர். அந்த வகையில், கடந்த 6 நாட்களில் அவரிடம் 300-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்த அவகாசம் இன்றுடன் (12-ந் தேதி) முடிகிறது. இதையடுத்து அவர் இன்று பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். 

    • இதுவரை நடந்துள்ள விசாரணையில் 150-க்கும் மேற்பட்ட ஆவணங்களுக்கு செந்தில்பாலாஜி விளக்கம் அளித்து உள்ளார்.
    • பிரபல ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்து சரியான நேரத்துக்கு, செந்தில்பாலாஜிக்கு கொடுக்கப்படுகிறது.

    சென்னை:

    சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

    அதன் அடிப்படையில் செந்தில்பாலாஜியை கடந்த 7-ந்தேதியில் இருந்து காவலில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடக்கிறது.

    இதன்படி நேற்று 3-வது நாளாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடந்தது. அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ள ஆவணங்களை வைத்து அவரிடம் விளக்கம் கேட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இதுவரை நடந்துள்ள விசாரணையில் 150-க்கும் மேற்பட்ட ஆவணங்களுக்கு செந்தில்பாலாஜி விளக்கம் அளித்து உள்ளார். நேற்றும் ஆவணங்கள் அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

    விசாரணைக்கு இடையே அவருக்கு சற்று ஓய்வு கொடுக்கப்படுகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்து சரியான நேரத்துக்கு, செந்தில்பாலாஜிக்கு கொடுக்கப்படுகிறது. டாக்டர்கள் குழுவினரும் செந்தில்பாலாஜியை தினமும் 2 முறை பரிசோதிக்கிறார்கள். ரத்த அழுத்தம் பார்க்கப்படுகிறது.

    செந்தில் பாலாஜியை விமானத்தில் டெல்லிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

    அந்த தகவலுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதால், அவரை டெல்லி அழைத்து செல்லும் திட்டம் இல்லை, என்று கூறி விட்டார்கள். இதை செந்தில்பாலாஜி தரப்பும் உறுதி செய்து விட்டது.

    • சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர்.
    • மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் ½ மணி நேரம் அவகாசம் கேட்கப்பட்டது.

    புதுடெல்லி:

    அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் போட்டுள்ள வழக்கு விசாரணையும் சூடு பிடித்துள்ளது.

    போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் போடப்பட்டு உள்ள இந்த வழக்கு விசாரணையை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 16-ந் தேதி உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர்.

    இதனை கேட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அமர்வு கடும் அதிருப்தி அடைந்தது. ஏற்கனவே வழங்கிய 2 மாத அவகாசம் முடிந்துள்ள நிலையில் அதைவிட 3 மடங்கு கால அவகாசம் கேட்பது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் நினைத்தால் ஒரு வழக்கு விசாரணையை 24 மணி நேரத்திலும் முடிக்கலாம். 24 ஆண்டுகள் ஆனாலும் முடிக்காமல் இழுக்கலாம் என்று தெரிவித்தனர்.

    எனவே உங்கள் டி.ஜி.பி.யையும் உள்துறை செயலாளரையும் நேரில் வரச் சொல்லுங்கள். இன்னும் எத்தனை நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்கட்டும் என்று உத்தரவிட்டனர்.

    இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் ½ மணி நேரம் அவகாசம் கேட்கப்பட்டது. பின்னர் கோர்ட்டுக்கு வந்து முறையிட்ட போலீசார் மேலும் 3 மாதங்கள் அவகாசம் கேட்டதுடன் டி.ஜி.பி., உள்துறை செயலாளர் ஆஜராக உத்தரவிட்டதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து டி.ஜி.பி.யும் உள்துறை செயலாளரும் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற்ற நீதிபதிகள், 3 மாதம் அவகாசம் வழங்க முடியாது என்றும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதற்குள் நீங்கள் முடிக்காவிட்டால் சிறப்பு புலனாய்வு விசாரணை உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

    ×